தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த வழக்கு: 2 பிள்ளைகளின் தாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த வழக்கில் 2 பிள்ளைகளின் தாய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
பெங்களூரு:-
ஆடு மேய்ந்த விவகாரம்
மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுன் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மா (வயது 70). அவரது பக்கத்து வீட்டில் ரேணுகா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு அவரது ஆடுகள், நஞ்சம்மா நிலத்தில் வைத்திருந்த பூச்செடிகளை மேய்ந்தது. இதுகுறித்து அறிந்த நஞ்சம்மா, ரேணுகாவுடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ரேணுகா, நஞ்சம்மாவை தாக்கி உள்ளார். இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
மூதாட்டி சாவு
இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மலவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நஞ்சம்மா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ரேணுகாவை மண்டியா மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக மண்டியா மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரேணுகாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து, ரேணுகா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், ஆடுகள் மேய்ந்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில், பக்கத்து வீட்டு மூதாட்டியை ரேணுகா தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் தூரத்து உறவினர் என்று தெரிகிறது. அவர்களுக்கு இடையே வேறு எந்த முன்விரோதமும் இல்லை என்பது தெரிகிறது.
தண்டனை ரத்து
மேலும் கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு அவர் குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்பதும், அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பது போன்ற காரணங்களை முன்வைத்து ரேணுகாவின் சிறை தண்டனையை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.
மேலும் ரேணுகா அடுத்த ஓராண்டில் ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும், உத்தரவாத தொகையை பிணையமாக கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.