கர்நாடக சட்டசபைக்கு உடனே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
கர்நாடகத்தில் சட்ட விதிகளை மீறி அரசு எந்தரம் தவறாக பயன்படுத்துவதால் சட்டசபைக்கு உடனே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்ட விதிகள்
சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளை மீறி அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. இத்தகயை சட்ட விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். எங்கள் கட்சி தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்திக்க இருக்கிறோம்.
மக்களின் வரிப்பணத்தில் பொய் தகவல்களை இந்த அரசு விளம்பரமாக வழங்குகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். சட்டசபை தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ஆபரேஷன் தாமரை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது. மந்திரிகள் கமிஷன் பெற்று வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பா.ஜனதா படுதோல்வி
அதனால் 40 சதவீத கமிஷன் என்பதை தாண்டி 50, 60 சதவீத கமிஷன் வசூலிக்கப்படுகிறது. மந்திரிகளின் அலுவலகங்கள் பணம் பறிக்கும் மையங்களாக மாறிவிட்டன. இதற்காக அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு பா.ஜனதாவை சேர்ந்த மாடாள் விருபாக்ஷப்பா மகன் பிரசாந்த் லோக்அயுக்தாவில் சிக்கி இருப்பதே சாட்சி.
கமிஷன் கொடுப்பதற்கு பயந்து இன்னும் சில ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைவது உறுதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட டெண்டர்கள் மறுபரிசீலனை செய்யப்படும். லஞ்சம் கொடுத்து டெண்டர்கள் பெற்று இருந்தால் அத்தகைய டெண்டர்கள் ரத்து செய்யப்படும்.
பண அரசியல்
இந்த அரசு மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால் அதற்கு ஆதாரம் எங்கே என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்கிறார். கமிஷன் கொடுக்க முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் லஞ்சம் வாங்கும்போது சிக்கியுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு இன்னும் எவ்வளவு ஆதாரங்கள் வேண்டும்?. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிரதமர் மோடி உள்பட யாருக்கும் இல்லை. இந்து-முஸ்லிம் இடையே பிரச்சினை ஏற்படுத்தி ஓட்டு வாங்கும் பா.ஜனதாவின் தந்திரம் மக்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது. தற்போது அவர்கள் முன்பு உள்ள ஒரே வழி, பண அரசியல்.
குறைத்து சீரழிக்கிறார்
பிரதமர் பதவி என்பது கட்சி அரசியலை தாண்டியது. ஆனால் பிரதமர் மோடி சட்ட விதிகளை மட்டும் காற்றில் பறக்கவிடாமல், அந்த பதவியின் கண்ணியத்தையும் குறைத்து சீரழிக்கிறார். சமீபத்தில் மோடி கர்நாடக பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, தெருவில் ஒருவர் பேசும் பேச்சை போல் இருந்தது. கர்நாடகத்தில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோது மோடி வரவில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.