மராட்டியத்தில் இன்று கூடுகிறது சிறப்பு சட்டசபை: சபாநாயகர் தேர்வாகிறார்
நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. கடந்த புதன்கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
சினிமா கிளைமாக்ஸ் போல மறுநாளே புதிய அரசு அமைந்தது. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.
10 நாட்களுக்கு மேலாக நடந்த அரசியல் மாயாஜாலங்களை தொடர்ந்து, பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.
சபாநாயகர் தேர்தல்
புதிய அரசு அமைந்துள்ளதை தொடர்ந்து, கடந்த 1¼ ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள சபாநாயகர் தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.
முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பை கொலபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேக்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுநாள் வரை ஆளும் கட்சிகளாக இருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தரப்பும் திடீரென பொது வேட்பாளரை அறிவித்தது. அவர்கள் சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜன் சால்வி வேட்பாளராக களமிறக்கி உள்ளனர். இவர் ரத்னகிரி மாவட்டம் ராஜாப்பூர் தொகுதியை சேர்ந்தவர். இவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயந்த் பாட்டீல், தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்), அசோக் சவான் (காங்கிரஸ்), சுனில் பிரபு (சிவசேனா) ஆகியோர் உடனிருந்தனர்.
இதனால் சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை திரும்பிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
இந்த நிலையில் கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 வாரங்களுக்கு பிறகு நேற்று இரவு விமானம் மூலம் மும்பை திரும்பினர். முன்னதாக காலையில் கோவா சென்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களை தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் மும்பையில் உள்ள தாஜ் பிரசிடன்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்திற்கு ஓட்டலில் இருந்து நேரடியாக புறப்பட்டு செல்கின்றனர்.
நாளை (திங்கட்கிழமை) ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். சபாநாயகர் தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றி பெற்று விட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஷிண்டே அரசு எளிதாக வெற்றி பெற்று விடும்.
இந்த நிலையில் ஷிண்டே அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிவசேனா தரப்பு சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி வியூகம் வகுத்துள்ளது. எனவே சபாநாயகர் தேர்தல் மிகுந்த அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய சட்டசபை மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் ஒரு உறுப்பினர் இறந்து விட்ட நிலையில், தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. சபாநாயகர் தேர்தலிலும், அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சுமார் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.