உள்ளாட்சிகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
சுப்ரீம் கோர்ட்டு வழக்கு ஒன்றில், உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு கூறியது. அதே நேரத்தில் அந்த சமூகங்கள் அரசியல் ரீதியாக இன்னமும் பின்தங்கியுள்ளதா? என்பதை கண்டறிந்து அறிவியல் பூர்வமாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த தீர்ப்பினால் கர்நாடகத்தில் ஏற்கனவே நடைபெற வேண்டிய மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலும் நடைபெறவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் தேர்தலை நடத்த கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார்.
குழுவுக்கு உத்தரவு
இதில் கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அரசியல் ரீதியாக பின்தங்கி இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவத்சலா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிக்கமத் நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள பிரதிநிதித்துவம் மற்றும் இனிமேலும் அவை கிடைக்க வேண்டுமா? என்பது குறித்து ஆய்வு செய்து புள்ளி விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த குழுவுக்கு அரசு உத்தரவிட்டது.
அதன்படி அந்த குழு மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அரசியல் நிலை குறித்து ஆராய்ந்தது. இந்த நிலையில் அந்த குழு தலைவர் நீதிபதி பக்தவத்சலா நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பெங்களூருவில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அரசின் இட ஒதுக்கீட்டில் பிரிவு-ஏ, பிரிவு-பி பட்டியலில் உள்ள சாதிகள் இன்னும் சமூக-அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ளன. அதனால் அந்த சமூகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பது நியாயமானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. அந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒப்புதல் பெறும்
கர்நாடக அரசு இந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அனுமதி கிடைத்தால் பெங்களூரு மாநகராட்சி மற்றும் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்துகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பெங்களூரு மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் பதவி காலம் 30 மாதங்கள் என்று நிர்ணயிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.