பூக்கள் தூவிய போது பிரதமர் மோடி வாகனத்தின் மீது விழுந்த செல்போன்; கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம்


பூக்கள் தூவிய போது பிரதமர் மோடி வாகனத்தின் மீது விழுந்த செல்போன்; கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம்
x

பூக்கள் தூவியபோது தான் பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் விழுந்ததாக கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

மைசூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் நாள் ஒன்றுக்கு 3 இடங்களில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதுடன், ரோடு ஷோவும் நடத்தி வருகிறார். இவ்வாறு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மோடி நேற்று முன்தினம் மைசூருவில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடத்தினார். அந்த சமயத்தில் அவரது வாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. அதாவது பிரதமர் மோடி மீது யாரோ செல்போன் வீசியதாகவும், பிரதமரின் மோடி பங்கேற்கும் கர்நாடக நிகழ்ச்சியில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வேண்டுமென்றே வீசப்படவில்லை. ஒரு பெண், பிரதமர் மோடியை வரவேற்க பூக்களை தூவிய போது தவறுதலாக செல்போனும் தூக்கி எறியப்பட்டு பிரதமரின் வாகனம் மீது விழுந்துள்ளது. அந்த பெண் பா.ஜனதா பிரமுகர் ஆவார். அந்த செல்போனை பெண் பிரமுகரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றார். ஏற்கனவே கேரளாவில் நடந்த ஊர்வலத்தின் போதும் பிரதமர் மோடி மீது பூக்கள் தூவும் போது இவ்வாறு செல்போன், வாகனம் மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story