வெற்றிபெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் உத்தரவு
சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘ரெசார்ட்’ அரசியலுக்கு காங்கிரஸ் தயாராகி உள்ளது. பா.ஜனதாவுக்கு கட்சிக்கு தாவுவதை தடுக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரு:
சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 'ரெசார்ட்' அரசியலுக்கு காங்கிரஸ் தயாராகி உள்ளது. பா.ஜனதாவுக்கு கட்சிக்கு தாவுவதை தடுக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'ரெசார்ட்' அரசியலுக்கு...
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. கருத்து கணிப்பு முடிவுகளும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்புகள் வந்திருப்பதால், கடந்த 2 நாட்களாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
அதாவது 110 முதல் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டில் தங்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாகவே 'ரெசார்ட்' அரசியலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி இருக்கிறது.
பெங்களூருவுக்கு வர உத்தரவு
அதே நேரத்தில் 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம் என்பதால், ரெசார்ட் அரசியல் வேண்டாம் என்ற முடிவில் உள்ளனர். இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்து இருந்தது.
இதனால் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவி விடக்கூடாது என்பதால், எம்.எல்.ஏ.க்களை ஒரே ரெசார்ட் ஓட்டலில் தங்க வைத்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், சுயேச்சையாக வெற்றி பெற வாய்ப்புள்ள சிலரை காங்கிரசுக்குள் இழுக்க சித்தராமையா பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.