கர்நாடகத்தை பிரதமர் மோடிக்கு கொடுக்கும் தேர்தலா?


கர்நாடகத்தை பிரதமர் மோடிக்கு கொடுக்கும் தேர்தலா?
x

கர்நாடகத்தை பிரதமர் மோடிக்கு கொடுக்கும் தேர்தல் என்று பேசியதாக கூறி உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெரிய அவமானம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளார். பெலகாவியில் நேற்று 2-வது நாளாக அவர் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, இந்த தேர்தல் கர்நாடகத்தை பிரதமர் மோடிக்கு கொடுக்கும் தேர்தல் என்று கூறியுள்ளார். அவர் உண்மையை தான் பேசியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது கன்னடர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம். கர்நாடகத்தை கவனித்துக்கொள்ள ஒரு கன்னடரும் இல்லாத அளவுக்கு பா.ஜனதா திவாலாகிவிட்டதா?.

பா.ஜனதா சதி

ஜனநாயகத்தில் வாக்காளர்கள் வாக்களித்து தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு சேவையாற்ற தேர்ந்து எடுக்கப்படுவது இல்லை. அமித்ஷாவின் கருத்து சுயமரியாதை உள்ள கன்னடர்களை அவமதிப்பதாக உள்ளது. கர்நாடகத்தில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், வங்கிகள் குஜராத் வியாபாரிகளுக்கு வழங்கிவிட்டனர்.

எங்களின் பெருமை மிகுந்த நந்தினி பால் நிறுவனத்தையும் கபளீகரம் செய்ய பா.ஜனதா சதி செய்கிறது. தற்போது ஒட்டுமொத்த கர்நாடகத்தையே விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தேர்தலில் கன்னடர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். டெல்லியில் அமர்ந்து ஆட்சியை நடத்த இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது, இது ஜனநாயகம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வாதிகார மனநிலை

கன்னடத்தின் கழுத்தை நெறித்து இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இங்குள்ள அரசியல் தலைமையை நாசப்படுத்தும் உங்களின் சர்வாதிகார மனநிலையை கன்னடர்கள் தற்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜனதாவினர் வேண்டுமானால் அவர்களுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால் நிலம், நீர், மொழி, கன்னடத்தின் அடையாளத்தை காக்க கன்னடர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள். கன்னடர்களை கிளற வேண்டாம்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story