வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்
வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. காங்கிரசுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் கமிஷனர் கர்நாடக தலைமை செயலாளர் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகளில் தவறுகள் நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பணிகளை சரியாக மேற்கொள்ளாத பெங்களூரு மாநகராட்சி (மத்திய) மற்றும் பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிவாஜிநகர், சிக்பேட்டை, மகாதேவபுரா தொகுதிகளில் பெயர் சேர்த்தல், நீக்க பணிகளை 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த பெயர் சேர்த்தல், நீக்க பணிகளுகளை மேற்பார்வையிட பெங்களூரு மாநகராட்சி அல்லாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் விஷயத்தில் ஒவ்வொரு நிலையிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.