மும்பையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் அவதி
மும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்ட விபத்தால் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை
மராட்டிய மாநிலம் அம்பர்நாத் ரெயில் நிலையத்துக்கு பணிமனையில் இருந்து காலை 8.25 மணியளவில் மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. பணிமனையில் இருந்து வரும் ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் பின்னால் உள்ள ஒரு பெட்டி தடம் புரண்டது. பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் தடம் புரண்டு தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கியது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கர்ஜத் நோக்கி சென்ற ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்தநிலையில் மீட்பு பணிகள் முடிந்து காலை 10.40 மணிக்கு அந்த வழியாக ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. எல்.டி.டி. - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் 10.45 மணிக்கு அந்த வழியாக சென்றது. காலை நேரத்தில் மின்சார ரெயில் தடம் புரண்ட விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மத்திய ரெயில்வே சார்பில் தினந்தோறும் 1,810 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சுமார் 40 லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.