மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது; விவசாய சங்க தலைவர் பேட்டி
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது என விவசாய சங்க தலைவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் மாவட்ட விவசாய சங்கத்தலைவர் குருசாந்தப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடகத்தில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு மின்வாரியத்தை தனியார் மயமாக்கினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடை செய்யப்படும்.
விவசாயிகள் மேலும் கடன் சுமையில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே மழையால் பயிர்களை இழந்து தவித்து வரும் விவசாயிகள், மின்சார வாரியம் தனியார் மயமானால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்சார வாரியத்தை தனியார் மாயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் முடிவை கண்டித்து வருகிற 10-ந்தேதி சிக்கமகளூருவில் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.