திருப்பதி உண்டியல் காணிக்கையை திருட முயன்ற ஊழியர் கைது


திருப்பதி உண்டியல் காணிக்கையை திருட முயன்ற ஊழியர் கைது
x

திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் அமெரிக்க டாலர் நோட்டுகளை திருட முயற்சி செய்ததால் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி,

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அதிகமாக வருமானம் பெறும் இந்துக் கோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

திருப்பதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 60,000 முதல் 70,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். பிரம்மோற்சவம், ரதசப்தமி போன்ற மிக முக்கிய உற்சவங்கள் நடைபெறும் காலங்களில் திருமலையில் நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் எண்ணப்படுவது வழக்கம். இதற்காக கோவில் தேவஸ்தான பணியாளர்களுடன், நியமிக்கப்பட்ட சேவாதாரிகள், பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் ஒருவர் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகளை ஆடைக்குள் மறைத்து திருட முயன்றார். அப்போது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த விஜிலன்ஸ் அதிகாரிகள் ரவிக்குமார் என்ற அந்த ஊழியரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.


Next Story