பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பா.ஜ.க.வுக்கு அரசியல் விவகாரமல்ல; அடிப்படை விசயம்: மத்திய மந்திரி அமித்ஷா
ஜன்தன் கணக்குகளில் 70 சதவீதம் வரை கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்களாக உள்ளனர் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவானது நேற்று தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மகளிருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு அவையின் 454 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 2 பேர் எதிராக வாக்களித்தனர்.
இதுபற்றி அவையில் மத்திய மந்திரி அமித்ஷா பேசும்போது, கொள்கை முடிவை எடுக்கும்போது, அதில் பெண்களின் பங்கும் இருக்கிறது என, நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மசோதா உறுதி செய்யும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆனது பல்வேறு கட்சிகளுக்கு ஓர் அரசியல் பிரச்சனையாக இருக்கலாம்.
ஆனால், பா.ஜ.க.வுக்கு அப்படியல்ல. அது பா.ஜ.க.வின் பணி கலாசாரத்தின் அடிப்படையான மைய விசயம் ஆகும் என்று கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு உருவானதில் இருந்து, பெண்களுக்கான பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பெண்களும் பங்காற்றுவது என்பது அரசின் கவனத்திற்குரிய விசயங்களாக இருந்து வருகின்றன என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து, ஜன்தன் கணக்குகளில் 70 சதவீதம் வரை கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்களாக உள்ளனர் என்பதே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என கூறியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் உறுதி செய்யப்படுவதற்கான நீண்ட வழிக்கான முயற்சியில் நாடு முழுவதும் 11 கோடியே 72 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு பின்னர் வரலாறு படைக்கப்பட்டு உள்ளது என மத்திய சட்ட மந்திரி ராம் மேக்வால் கூறியுள்ளார். இந்த மசோதாவானது நாடாளுமன்ற மேலவையில் இன்று எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.