பெங்களூருவில் ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது.
பெங்களூரு
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட் 2-வது ஸ்டேஜ் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்து இருந்தனர். ஆனால் சாலை விரிவாக்க பணிகளுக்காக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ. நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கடை உரிமையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனு கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ. அதிகாரிகள் சென்றனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடைகளின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் 15-க்கும் மேற்பட்ட கடைகள், கூடாரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதன்மூலம் 1¼ ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அதன்மதிப்பு ரூ.100 கோடி என்றும் பி.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.