புனித மண் சேகரிக்கும் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு
கோலார் தங்கவயலில் புனித மண் சேகரிக்கும் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோலார் தங்கவயல்:
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறக்கும் நிகழ்ச்சி வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் புனித மண் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், புனித மண் எடுக்கும் கெம்பேகவுடா ரத யாத்திரை நேற்று முன்தினம் கோலார் தங்கவயலுக்கு வந்தது. அந்த ரத யாத்திரைக்கு தங்கவயலில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தாசில்தார் சுஜாதா, நகரசபை தலைவி மாதவி உள்பட பலர் ரத யாத்திரையை வரவேற்றனர். மேலும் மக்களும் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் லட்சுமி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ரதத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து கீதா சாலை வழியாக சுராஜ்மெல் சர்க்கிள், காந்தி சாலை, உரிகம்,
அம்பேத்கர் சாலை வழியாக பங்காருபேட்டைக்கு ரதம் சென்றது. முன்னதாக தங்கவயலில் சேகரிக்கப்பட்ட புனித மண் ரதத்தில் ஒப்படைக்கப்பட்டது.