எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவார்... கட்சியையே உடைத்த அஜித் பவார் - அரசியல் சதுரங்கம்: 2019 முதல் இன்று வரை...


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவார்... கட்சியையே உடைத்த அஜித் பவார் - அரசியல் சதுரங்கம்: 2019 முதல் இன்று வரை...
x
தினத்தந்தி 2 July 2023 5:27 PM IST (Updated: 2 July 2023 5:28 PM IST)
t-max-icont-min-icon

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சரத் பவார் ஈடுபட்டார்.

மும்பை,

2019 மராட்டிய தேர்தல்:-

மராட்டிய சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி:-

தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றன. தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி சேர்ந்து 161 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி ஆட்சி:-

ஆனால், மராட்டிய முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது. இதன் காரணமாக பாஜகவுக்கு ஆதரவு இல்லை என சிவசேனா அறிவித்தது. இதனை தொடர்ந்து மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வந்தன.

அஜித்பவார் அதிரடி:-

இந்த 3 கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இரவோடு இரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்.

பாஜக ஆட்சி, பட்னாவிஸ் முதல்-மந்திரி:-

இதனை தொடர்ந்து 2019 நவம்பர் 22-ம் தேதி நள்ளிரவு மராட்டியத்தில் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. 2019 நவம்பர் 23-ம் தேதி காலை மராட்டியத்தில் முதல்-மந்திரியாக பாஜக மூத்த தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் பதவியேற்றார். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்- மந்திரியாக பதவியேற்றார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவாரை அவரது சித்தப்பாவான சரத் பவார் சந்தித்தார். உடனடியாக பாஜகவுக்கு வழங்கிய ஆதரவை அஜித்பவார் திரும்பப்பெற்றார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தேவேந்திரபட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய பாஜக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு 2019 நவம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டது.

முதல்-மந்திரி பட்னாவிஸ் ராஜினாமா:-

ஆட்சிக்கு வழங்கிவந்த ஆதரவை அஜித்பவார் திரும்பப்பெற்றதால் பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திரபட்னாவிஸ் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். முதல்-மந்திரியாக பதவியேற்ற 80 மணி நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணி:-

இதனை தொடர்ந்து அஜித்பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் இணைந்தார். இந்த இணைப்பை தொடர்ந்து சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் (மகாவிகாஸ் அகாடி கூட்டணி) இணைந்து மராட்டியத்தில் ஆட்சி அமைத்தது.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே:-

2019 நவம்பர் 27-ம் தேதி மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இதன் மூலம் மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் சிவசேனா,காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

ஒன்றரை ஆண்டுகளாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் 2022 ஜூன் மாதம் திடீரென சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக திரும்பினார்.

சிவசேனா பிளவு:

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பினர். இதனால் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆட்சி கவிழ்ப்பு:-

இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பெரும்பான்மை இல்லாததால் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத்ஷிண்டே:-

இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாஜகவும் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றின. 2022 ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார். இந்த அரசில் 125 பாஜக எம்.எல்.ஏ.க்கள், 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் (ஏக்நாத்ஷிண்டே தரப்பு) ஆதரவு உள்ளது. மொத்தம் 165 எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

சிவசேனா பிளவு:-

அதேவேளை, சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்தது. ஏக்நாத்ஷிண்டே தரப்பு என்றும், உத்தவ் தாக்கரே தரப்பு என்றும் இரண்டாக சிவசேனா பிரிந்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா (ஷிண்டே தரப்பு) - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

சுப்ரியா சுலே:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் புதிய தலைவராக சுப்ரியா சுலே செயல்படுவார் என்றும் சரத்பவார் சமீபத்தில் தெரிவித்தார். தனது மகளான சுப்ரியா சுலே கட்சியின் தலைவராக செயல்படுவார் என சரத்பவார் அறிவித்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சுப்ரியா சுலே தலைவர் பதவியில் செயல்படமாட்டார் தானே தொடர்ந்து தலைவராக செயல்படுவேன் என்று சரத்பவார் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.

தேசியவாத காங்கிரஸ் பிளவு:-

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கட்சியில் மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏ.க்களில் அஜித்பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மராட்டிய அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

துணை முதல்-மந்திரியாக அஜித்பவார்:-

இந்த ஆதரவை தொடர்ந்து தொடர்ந்து அஜித்பவார் மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். மேலும், சில தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான மராட்டிய அமைச்சரவையில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியும்,தேசியவாத காங்கிரஸ் பிளவும் :-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்பட நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த முயற்சித்து வருகின்றன.

இதற்கான முதல் படியாக கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் விரைவில் கர்நாடகாவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மிகவும் முக்கியத்தலைவராக செயல்பட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆவார்.

தேர்தலில் பாஜகவை வீழ்த்த சரத்பவார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவரது கட்சியான தேசியவாத காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் மராட்டியத்தில் ஆளும் பாஜக - சிவசேனா (ஏக்நாத்ஷிண்டே தரப்பு) கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் சரத்பவாரின் தேசியவாத கட்சி இரண்டாக உடைந்து அதன் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பவாரின் முயற்சியின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Next Story