ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல்


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46), உடல்நலக்குறைவால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலி

இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது.

ஒரு தொகுதி காலியாகிறபோது, 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து சமீபத்தில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, 6 மாதத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குப் பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, அவற்றின் தயார் நிலை, வாக்குச்சாவடிகளின் தயார் நிலை, பாதுகாப்புப் பணி, தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அவர் அனுப்பியும் வைத்தார்.

பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல்

இந்த நிலையில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், டெல்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல்

இந்த தொகுதியில் வரும் 31-ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முடிகிறது. மறுநாளில் (8-ந் தேதி) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு 10-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

கடந்த தேர்தலில் நிலவரம்

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தனக்கு அடுத்தபடியாக வந்த த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஓட்டு விவரம்

திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), - 67,300

யுவராஜா (தமாகா) - 58,396

கோமதி (நாம் தமிழர் கட்சி) - 11,629

ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10,005

நோட்டா - 1,546

முத்து குமரன் (அமமுக) - 1,204

ஆறுமுக கண்ணன்(ஏபோல்) - 373

கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ்) - 372

மீனாட்சி (சுயேச்சை) - 299

ஷாஜகான் (சுயேச்சை) - 256

யுவராஜ் (சுயேச்சை) - 235

சண்முகவேல் (எம்.ஜி.எம்.கே.) - 151

ராஜா (எம்.டி.எம்.கே.) - 102

அந்தோணி பீட்டர் (சுயேச்சை) - 96

மின்னல் முருகேஷ் (சுயேச்சை) - 73

பெண் வாக்காளர்கள் அதிகம்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள நிலையில், சென்னையில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்கு 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713, பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 23 பேர் உள்ளனர். எனவே இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

இந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடத்தை விதிகள் அமல்

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, ஈரோடு மாநகராட்சிக்குள் முழுமையாக அமைந்திருப்பதால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, அந்த மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும்போது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.

தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர் நியமனம் குறித்து முடிவு செய்யப்படும்.

தேர்தல் பாதுகாப்புக்காக பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

கொரோனா பாதிப்பு இருக்கும் தொகுதியாக கண்டறியப்பட்டால் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடத்தை நெறிமுறைகள் தேர்தலின்போது கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியிடப்போவது யார்?

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது.

இடைத்தேர்தலில் மீண்டும் இந்தக் கட்சிகளே போட்டியிடுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.


Next Story