எரிபொருளில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்


எரிபொருளில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்
x
தினத்தந்தி 19 Dec 2022 2:08 AM IST (Updated: 19 Dec 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் எரிபொருளில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

ஹாவேரி,:-

எத்தனால் ஆலைகள்

ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தொகுதியில் சர்க்கரை ஆலை மற்றும் எத்தனால் உற்பத்தி நிலைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த சர்க்கரை ஆலையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டிலேயே பெங்களூருவில் தான் ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எத்தனால் ஆலைகளுக்கு அதிக தேவை எழுந்துள்ளது. இவற்றுக்கு 6 சதவீத வட்டி மானியம் மற்றும் 95 சதவீத பொருளாதார உதவி அளிக்கப்படுகிறது. ஹாவேரி மாவட்டத்தில் இன்னும் அதிகளவில் எத்தனால் ஆலைகள் வரவுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும்.

முன்னேறும் மாநிலம்

அடுத்த 50 ஆண்டுகளில் உயிரி எரிபொருளுக்கு அதிக தேவை எழும். சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி இவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டுள்ளது. இவற்றின் வளர்ச்சியில் சமத்துவத்தை ஏற்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். கர்நாடகம் வேகமாக முன்னேறி வரும் மாநிலம் ஆகும். நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுகிறார்.

பொருளாதார வளர்ச்சி பெற மின் உற்பத்தியுடன் சுற்றுச்சூழலையும் காக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். உயிரி எரிபொருள் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் எரிபொருளில் எத்தனால் கலப்படம் செய்வது 10 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கை இந்த ஆண்டிலேயே எட்டிவிட்டோம்.

தூய்மையான எரிபொருள்

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் எரிபொருளில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் அளவுக்கு குறையும். இதனால் நமது நாட்டின் மீதான பொருளாதார சுமையும் குறையும். அது மட்டுமின்றி தூய்மையான எரிபொருள் உற்பத்தியும் சாத்தியமாகும். திடமான தலைமை இருந்தால் பிரச்சினைகள் தானாகவே தீரும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story