எத்தினஹொளே கூட்டு குடிநீர்திட்டம் நிறைவேற்றப்படும்


எத்தினஹொளே கூட்டு குடிநீர்திட்டம் நிறைவேற்றப்படும்
x

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் எத்தினஹொளே கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் முதல் மந்திரி வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்:-

பெட்ரோல் விலை உயர்வு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேப்பள்ளி தாலுகா, ஜி மத்தேப்பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் பிரசார குழுவை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மந்திரி வீரப்பமொய்லி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கினார். ஆனால் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இவை 5 கிலோவாக குறைந்தது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது, சிலிண்டர் விலை ரூ.420 ஆக இருந்தது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் சிலிண்டர் விலை ரூ.1100-க்கும், பெட்ரோல் விலை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எத்தினஹொளே திட்டம்

இதேபோல அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. வெளி நாடுகளில் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விடுகின்றனர். ஆனால் மக்களிடம் மட்டும் அதிக விலைக்கு பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதை மக்கள் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும். கர்நாடகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுவோம். குறிப்பாக கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க எத்தினஹொளே கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story