புனித மண் சேகரிப்பில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்
புனித மண் சேகரிப்பில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் நகர பா.ஜனதா தலைவர் கமலநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவை நிர்மானித்த கெம்பேகவுடாவுக்கு, தேவனஹள்ளியில் 24 ஏக்கர் நிலரப்பரப்பில் 108 அடி உயர சிலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலை அமைக்க மாநிலத்தில் அனைத்துபகுதிகளில் இருந்து புனித மண் சேகரிக்கும் யாத்திரையை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 14-ந் தேதி தொடங்கிய புனித மண் சேகரிக்கும் ரதயாத்திரை பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. கோலார் தங்கவயலுக்கு வருகிற 2-ந் தேதி வந்தடைகிறது. அதைதொடர்ந்து 3-ந் தேதி கோலார் தங்கவயல் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று புனித மண் சேகரித்து கொண்டு செல்லப்படும். இதில் பா.ஜனதாவினர் மட்டும் இன்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் வேற்றுமையை மறந்து கெம்பேகவுடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புனித மண் சேகரிப்பில் கலந்து கொள்ளவேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.