ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கடல்சார் வல்லரசாக இருந்தது- பிரதமர் மோடி பெருமிதம்


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கடல்சார் வல்லரசாக இருந்தது- பிரதமர் மோடி பெருமிதம்
x

 Image Courtesy: ANI 

இந்தியா கடல்சார் வல்லரசாக இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முன்னேற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி கூறுகையில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா கடல்சார் வல்லரசாகவும், முக்கிய கடல் வணிகப் பாதைகளின் ஒரு பகுதியாகவும் இருந்தது என்பதை நிரூபிக்கும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.

லோதலில் கட்டப்படும் பாரம்பரிய வளாகம், பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைப் பற்றிய தகவல்கள் மக்களை சென்றடைய சிறந்த ஆதாரமாக இருக்கும்" என்றார்.

இந்தியாவின் வளமான மற்றும் பரவலான கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதற்கு மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சுற்றுலா தலமாகவும் லோத்தல் நகரம் வளர்வதற்கு உதவும் வகையில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு, இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story