கார் விபத்து: முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங்கின் மருமகள் பலி
பலத்த காயமடைந்த மன்வேந்திர சிங்கின் உடல்நிலை அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்வார்:
முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் (வயது 59). இவர் தன் மனைவி சித்ரா சிங் (வயது 55), மகன் ஹமிர் சிங் (வயது 25) ஆகியோருடன் இன்று டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. நவுகாவா என்ற ஊரின் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், உயர்மட்ட சாலையின் நடுவில் உள்ள சிமெண்ட் சுவரில் மோதி நொறுங்கியது.
மன்வேந்திர சிங், சித்ரா சிங், ஹமிர் சிங் மற்றும் டிரைவர் என நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா சிங் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த மன்வேந்திர சிங்கின் உடல்நிலை அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான மன்வேந்திர சிங், பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவரது மறைவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, பா.ஜ.க. மாநில தலைவர் சதீஷ் பூனியா, முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மன்வேந்திர சிங்கின் தந்தை ஜஸ்வந்த் சிங், 2020-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.