சவால்களுக்கு மத்தியில் தேர்வில் வெற்றி; 10, 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி, சவால்களுக்கு மத்தியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் படித்து வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.
இதில் பேசிய பிரதமர் மோடி, ஒரு சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சவால்களுக்கு மத்தியில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் டீம் இந்தியா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் 92.71 சதவீத தேர்ச்சியுடன் கடந்த 22ந்தேதி வெளிவந்தன. இவற்றில் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகள் 3.29 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேவேளையில், திருநங்கை பிரிவினர் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று ஆச்சரியமடைய வைத்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த சில மணிநேரங்களில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளிவந்தன.