'வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை'; கோவில்களில் சாமி தரிசனம் செய்வதில் முதியவர்களுக்கு சலுகை


வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை; கோவில்களில் சாமி தரிசனம் செய்வதில் முதியவர்களுக்கு சலுகை
x

கர்நாடகத்தில் கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்டோர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்டோர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

வரிசையில் நிற்க வேண்டாம்

கர்நாடகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 300-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. குறிப்பாக 'ஏ' பிரிவில் குக்கே சுப்பிரமணியசுவாமி, நிமிஷாம்பா, சவதத்தி எல்லம்மா, தொட்ட கணபதி, பிளிகிரி ரங்கநாத சுவாமி உள்பட 200 கோவில்கள் உள்ளன. இதுபோல், 'பி' பிரிவில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன.

இந்த கோவில்களில் தற்போது 65 வயதுக்கு மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால் இனிமேல் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 300 கோவில்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டோர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதானவர்களுக்கு ஆதார்...

சமீபகாலமாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால், வயதானவர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். 65 வயதானவர்கள் உடல் நல பாதிப்புடன் நீண்ட வரிசையில் நிற்பதால், இன்னும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அறிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, 65 வயதானவர்கள் என்பதை காட்டுவதற்காக ஆதார் கார்டு இருந்தால் போதுமானதாகும். அவர்கள் வரிசையில் நிற்காமல் கோவில்களில் நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். வயதானவர்களுக்கு உதவி செய்வதற்காக கோவில்களில் சிறப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு, அங்கு ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் தான் வயதானவர்களை வரிசையில் நிற்க விடாமல் நேரடியாக சாமி தரிசனம் செய்யும் ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.


Next Story