நித்யானந்தா சாமியார் வழக்குகள் பற்றி சர்வதேச போலீசிடம் விளக்கம்


நித்யானந்தா சாமியார் வழக்குகள் பற்றி சர்வதேச போலீசிடம் விளக்கம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் குறித்து சர்வதேச போலீசாருக்கு, கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு:-

நித்யானந்தா சாமியார்

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அவர் மீது பிடதி போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த வழக்குகள் குறித்து கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்குகளில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்யானந்தா சாமியார் இருந்து வந்தார். இதையடுத்து, கைது வாரண்டு பிறப்பித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

கைலாசா நாடு

மேலும் நித்யானந்தா சாமியாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் சி.ஐ.டி. போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. நித்யானந்தா சாமியார் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருவதாக சி.ஐ.டி. போலீசாரும் தெரிவித்து இருந்தனர்.

இந்தியாவில் இருந்து வெளியேறிய நித்யானந்தா சாமியார், கைலாசா என்ற தீவை விலைக்கு வாங்கி, தனி நாட்டை உருவாக்கி தனது சீடர்களுடன் குடியிருந்து வருகிறார். அந்த நாட்டின் அதிபராகவும் அவர் தன்னை அறிவித்து கொண்டார்.

சர்வதேச போலீசாருக்கு விளக்கம்

இதற்கிடையில், நித்யானந்தா சாமியாருக்கு எதிராக கர்நாடக சி.ஐ.டி. போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து விமானம், ரெயில் நிலையங்களுக்கும் ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பித்திருந்தார்கள். தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா சாமியாரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியை நாடியதுடன், அவர்களுக்கு கடிதமும் எழுதப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள், அவர் தலைமறைவானது குறித்து விளக்கம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசாருக்கு, சர்வதேச போலீசார் கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.

விளக்கம்

அதன்படி, சர்வதேச போலீசாருக்கு நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள், மற்ற தகவல்கள், கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்திருப்பது உள்ளிட்டவை குறித்து கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

சர்வதேச போலீசார் சில விளக்கம் கேட்டு இருந்ததாகவும், நித்யானந்தா சாமியார் பற்றிய தகவல்களை அளித்து உள்ளதாகவும் கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.


Next Story