முருகா மடத்தின் நிர்வாக அதிகாரியாக நீதிபதி பிரேமாவதி நீட்டிப்பு
முருகா மடத்தில் நிர்வாக அதிகாரியாக நீதிபதி பிரேமாவதியை நீட்டித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
சித்ரதுர்காவில் முருகா மடம் செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த சிவமூர்த்தி முர்கா சரணரு இருந்து வந்தார். அவர் பாலியல் புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டதால் மடாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து அந்த மடத்தை நிர்வகிக்க அரசு சார்பில் இடைக்கால நிர்வாக அதிகாரியாக, நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதையடுத்து சித்ரதுர்கா மாவட்ட மற்றும் செசன்சு நீதிபதி பிரேமாவதி மணகூலி, முருகா மடத்தின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் முருகா மடத்தின் நிர்வாக பொறுப்பை கிளை மடத்தின் மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி கமல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முருகா மடத்தின் இடைக்கால நிர்வாகியாக நீதிபதி பிரேமாவதி மணகூலி நியமிக்கப்பட்டு இருப்பதை வருகிற 18-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.