நகை வியாபாரியை மிரட்டி ரூ.5 லட்சம் பறிப்பு
சிக்கமகளூருவில் நகை வியாபாரியை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ்காரர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சிக்கமகளூருரு:-
2 கிலோ தங்கம்
தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் தங்க வியாபாரி பகவத். இவரது மகன் ரோஹித். இவர்கள் சிக்கமகளூருவில் தங்கம் வாங்கி விற்பனை செய்து வந்தனர். அதன்படி கடந்த மே மாதம் 7-ந் தேதி தாவணகெரேவில் இருந்து அஜ்ஜாம்புரா வழியாக சிக்கமகளூரு மாவட்டம் பேலூருவிற்கு ரோஹித் காரில் சென்றார். அங்கு 2 கிலோ தங்கம் வாங்கிய அவர் காரில் தாவணகெரேவிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அஜ்ஜம்புரா அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிங்கராஜ் என்பவர் வாகன சோதனையில் நடத்தினார். அதே வழியாக ரோஹித்தின் கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் நிங்கராஜ் சோதனை செய்தார். அப்போது காரில் 2 கிலோ தங்கம் இருந்தது. அதற்கான ஆவணங்களை கேட்டபோது, ரோஹித் எடுத்து காண்பித்தார்.
ரூ.5 லட்சம் கொடுத்தார்
அதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் நிங்கராஜ், ரூ.10 லட்சம் பணம் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்த தங்கத்தை எடுத்து செல்ல விடமாட்டேன் என்று கூறினர். மேலும் சக போலீஸ்காரர்களான தனபால் நாயக், ஓம்காரா மூர்த்தி, சரத்ராஜ் ஆகியோரிடம் பணம் வாங்கிவிட்டு காரை விடுவிக்கும்படி கூறினார்.
அவர்கள் 3 பேரும் ரோஹித்திடம் பணம் கொடுக்கும்படி வற்புறுத்தினர். முதலில் மறுப்பு தெரிவித்த ரோஹித், பின்னர் தங்கத்தின் பாதுகாப்பை கருதி ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.
4 பேர் பணியிடை நீக்கம்
அதை வாங்கி கொண்ட போலீசார் ரோஹித் செல்வதற்கு அனுமதி வழங்கினர். இதையடுத்து தாவணகெரே சென்ற ரோஹித் அந்த தங்கத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு ராஜஸ்தானில் உள்ள தாயாரை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். பின்னர் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாவணகெரே வந்தார்.
இதையடுத்து சிக்கமகளூரு வந்த ரோஹித், போலீஸ் சூப்பிரண்டு உமாபிரசாந்திடம் இதுபற்றி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அஜ்ஜம்புரா இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.
பணி இடைநீக்கம்
இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் நிங்கராஜ், போலீஸ்காரர்களான தனபால் நாயக், ஓம்காரமூர்த்தி, சரத்ராஜ் ஆகியோர் ரூ.5 லட்சம் பணம் பெற்றிருப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உமாபிரசாந்த், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்களை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.