கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை: நிலச்சரிவால் ஒருவர் உயிரிழப்பு !


கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை: நிலச்சரிவால் ஒருவர் உயிரிழப்பு !
x

image credit: ndtv.com

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மல்நாடு பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது.

மேலும் பெய்த மழையால் ஆறுகள் பெருக்கெடுத்து, விவசாய வயல்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து கடலோர கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story