பா.ஜனதாவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி பேட்டி
பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
மங்களூரு-
பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
அசோக் கெலாட்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதுபோல் கர்நாடகாவிலும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ராஜஸ்தானில் ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்குகிறோம்.
வரியை அதிகரிக்கவில்லை
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். மேலும் ரூ.25 லட்சம் வரை காப்பீடு செய்துள்ளோம். பசுக்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் காப்பீடு செய்து தருகிறோம். பாசிச சக்திகள் மட்டுமே காங்கிரஸ் அரசை கேலி செய்கின்றன. பஜ்ரங்பாலி மற்றும் ராமரின் பெயரில் பா.ஜனதா அரசியல் செய்கிறது. இவ்வாறான அரசியலுக்கு எந்த சந்தர்ப்பமும் வழங்க மாட்டோம்.
யாரும் கடவுளின் பெயரால் ஒரு அமைப்பை உருவாக்கி அதை சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது.ராஜஸ்தானில் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறிய 85 சதவீத வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள் 5 வரவு-செலவு திட்டங்களை முன்வைத்துள்ளோம். எந்த வரியையும் அதிகரிக்கவில்லை.
நல்லாட்சி பற்றி பேசியது இல்லை
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறி பா.ஜனதா ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறது. பா.ஜனதாவினருக்கு தைரியம் இருந்தாலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தட்டும். முதலில் உங்கள்(பா.ஜனதா) கட்சி ஆளும் மாநிலங்களீல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துங்கள். அதைவிடுத்து ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுவது ஏன்.
அனைத்து மாநிலங்களிலும் பணவீக்க பிரச்சினைகள் உள்ளன. பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். பா.ஜனதா ஒருபோதும் நல்லாட்சி பற்றி பேசியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.