காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகத்திற்கு மரியாதை இல்லை- பாஜக விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகத்திற்கு மரியாதை இல்லை என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மநில உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் இருந்து 79 ஆக குறைந்தது. இந்த சாதனை சித்தராமையாவை சேரும். முதல்-மந்திரி பதவி மீது பகல் கனவு காணும் காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பஸ் யாத்திரை மேற்கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 2-வது இடம் கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகத்திற்கு மரியாதை இல்லை.
அந்த கட்சியின் அடிப்படை கொள்கையே குடும்பம் தான். மகதாயி விவகாரத்தில் கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசு அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. சான்ட்ரோ ரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
சமுதாயத்தை உடைக்க, ஊழல் செய்ய சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகிறார். இளைஞர்களை பலப்படுத்த, கல்வி முறையை சீரமைக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்?. இதுகுறித்து சட்டசபையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசினால் அதற்கு தக்க பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். பொய் பேசிக்கொண்டு வேலை செய்யாமல் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.