ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்ததால் பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைய முயன்ற ரசிகர்கள்; போலீஸ் தடியடி-பரபரப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகளுக்கான டிக்கெட் விற்று தீர்ந்ததால் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைய முயன்ற ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்
இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கு என தனியே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் 3 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு தான் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகிறது. இதனால் இங்கு நடக்கும் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிக்கான டிக்கெட் ேநற்று மைதானத்தில் உள்ள கவுண்ட்டரில் விற்பனை செய்யப்பட்டது. அந்த டிக்கெட்டை வாங்க நேற்று முன்தினம் இரவே ரசிகர்கள் குவிய தொடங்கினர். நேற்று காலை அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
மைதானத்துக்குள் நுழைய முயற்சி
இதுபற்றி காத்திருந்த ரசிகர்களிடம் மைதான நிர்வாகம் தெரிவித்தது. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாகவும், கலைந்து செல்லும்படியும் கூறியதாக தெரிகிறது. இதனை ஏற்க மறுத்த ரசிகர்கள், டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மைதானத்தின் நுழைவு வாயில் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். மேலும் சாலையோரம் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை கீழே தள்ளினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் ரசிகர்களை கலைந்த செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
ேபாலீஸ் தடியடி
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.