கர்நாடகத்தில் 2 மாதத்தில் 42 விவசாயிகள் தற்கொலை


கர்நாடகத்தில்  2 மாதத்தில் 42 விவசாயிகள் தற்கொலை
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்ததாலும், கடன் தொல்லையாலும் கடந்த 2 மாதத்தில் 42 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். ஹாவேரி மாவட்டத்தில் மட்டும் 18 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்ததாலும், கடன் தொல்லையாலும் கடந்த 2 மாதத்தில் 42 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். ஹாவேரி மாவட்டத்தில் மட்டும் 18 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

பெண் விவசாயி தற்கொலை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதன் காரணமாக விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பருவமழை பொய்த்ததாலும், விவசாய பணிகளை தொடங்க முடியாததாலும் விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். அதன்படி, விஜயநகர் மாவட்டம் ஹகரி பொம்மனஹள்ளியை சேர்ந்த பெண் விவசாயியான அன்னக்கா(வயது 61) என்பவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்திருந்தார்.

அன்னக்காவுக்கு ரூ.4 லட்சம் கடன் இருந்ததாகவும், தற்போது பருவமழை பொய்த்ததால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் அன்னக்கா விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஹகரி பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

42 விவசாயிகள்உயிரை மாய்த்தனர்

இதுபோல், கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் அருகே குல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன அங்கடி(வயது 36). விவசாயியான இவருக்கு ரூ.16 லட்சம் கடன் இருந்தது. மல்லிகார்ஜுன அங்கடிக்கு 2 டிராக்டர்கள் இருந்தன. தற்போது பருவமழை பெய்யாத காரணத்தால் விவசாய பணிகள் நடைபெறாமல் இருந்ததால், விவசாயத்தில் இருந்து அவருக்கு எந்த வருவாயும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் மனம் உடைந்த மல்லிகார்ஜுன அங்கடி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்திருந்தார்.

கர்நாடகத்தில் கடந்த 2 மாதத்தில் கடன் தொல்லை, விவசாய பணிகள் நடைபெறாத காரணத்தால் 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று முன்தினம் 2 பேர் தற்கொலை செய்திருப்பதை சேர்த்து, கர்நாடகத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 42 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஹாவேரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் 18 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்திருந்தனர். கடன் தொல்லையால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.


Next Story