தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினர்.

மண்டியா:-

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே உள்ள கபினி அணை ஆகிய 2 அணைகளில் இருந்து தான் காவிரியில் தமிழகத்திற்கு நேரடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 101.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,891 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,293 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,273.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கபிலா ஆற்றில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி உத்தரவிட்டு இருக்கிறது. ஆனால் கர்நாடக அணைகளில் போதி அளவில் தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு கூறி வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து நேற்று கே.ஆர்.எஸ். அணை முன்பு கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் கருப்பு துணி கட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் நகலை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் வாயில் அடித்துக் கொண்டும் தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.

மண்டியா மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நஞ்சுகவுடா, பூமித்தாய் போராட்ட சமிதி தலைவர் கிருஷ்ணேகவுடா ஆகியோர் தலைமையில் நித போராட்டம் நடந்தது. மேலும் அவர்கள் போராட்டத்தின்போது கர்நாடக மாநில விவசாயிகளுக்கு நிரந்தரமாக அநியாயம் இழைக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

கோஷம் எழுப்பினர்

கர்நாடக மக்களுக்கு குடிநீர் வழங்கவே போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூறுவது சரியல்ல, கர்நாடகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினையை எடுத்துக்கூறி கோர்ட்டையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் நம்ப வைக்காமல் கர்நாடக அரசு மாநில மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். விவசாயிகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story