சிவமொக்காவில் திடீர் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி


சிவமொக்காவில்  திடீர் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 March 2023 12:15 PM IST (Updated: 16 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு, சிவமொக்கா மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு, சிவமொக்கா மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீர் கனமழை

கர்நாடகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உஷ்ணமான சூழ்நிலையால் அவதிப்பட்டு வரும் மக்கள், எப்போது மழைபெய்யும் என எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று கன மழை பெய்துள்ளது. ஏற்கனவே 15-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென்று மாநிலத்தின் சில இடங்களில் கனமழை பெய்தது.

மேற்கூரை பெயர்ந்தது

குறிப்பாக சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா, கொப்பா, கடூர், சக்கராயப்பட்டணா, நெடுகட்டா ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையுடன் சேர்ந்து சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாலேஒன்னூரில் ரம்பாபுரி மடத்தில் உள்ள பள்ளிகூடத்தின் சிமெண்ட் மேற்கூரை மற்றும் ஓடுகள் பெயர்ந்து விழுந்தன.

இதனால் பள்ளிக்குள் மழை நீர் தேங்கும் நிலை உருவானது. அதேபோல கொப்பா, என்.ஆர்.புரா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் காபி தோட்டங்களில் அதிகளவு நீர் பெருகியது. பயிர்களின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல சிவமொக்கா (மாவட்டம்) தாலுகாஆயனூர், சாகர் தாலுகா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த இந்த கனமழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இஞ்சி உள்பட பல்வேறு வகையான பயிர்கள் நடுவதற்கு விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். திடீரென்று பெய்த இந்த மழை பயிர்கள் நடுவதற்கு இடையூரை ஏற்படுத்தினாலும், இனி வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே மழை தொடர்ந்து நீடித்தால், பயிர்கள் செடிப்பதுடன், அடுத்தக்கட்ட விவசாய பணிகளையும் செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

மின் தடை

இதற்கிடையில் ஒரு சில இடங்களில் இந்த கன மழைக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இது தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story