மைசூருவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து மைசூருவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மைசூரு
காவிரி பிரச்சினை
கர்நாடக- தமிழகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சிைன பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மைசூரு டவுன் அரண்மனை பின்புறம் உள்ள காவிரி நீர் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பரிசீலனை செய்ய வேண்டும்
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதனை சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடக அணைகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு அதிகாரிகள் ஆய்வு செய்தால் தான் இங்குள்ள நிலைமை காவிரி மேலாண்மைக்கு தெரிய வரும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடகத்தில் பொதுமக்களுக்கு குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இதேப்போல், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தா விட்டால் கர்நாடகம் வறட்சியாக மாறிவிடும்.
கர்நாடக விவசாயிகளின் நலனை மாநில அரசு காக்க வேண்டும். அந்த வகையில் காவிரி விவகாரம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரிய கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை ஆய்வு செய்யாமல் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது என்பது தெரியவில்லை.
பேச்சுவார்த்தை
காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் காவிரி பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மந்திரி எச்.சி.மகாதேவப்பா வந்தார்.
அவரை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மந்திரி எச்.சி.மகாதேவப்பாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பின்னர், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேப்போல் கர்நாடக அரசுக்கு எதிராக விவசாயிகள் நஞ்சன்கூடு அருகே ஆற்றின் பாலத்தின் மீது படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனால்- மைசூரு-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவிரி பிரச்சினை மைசூருவில் தீவிரம் அடைந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.