பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தமிழகத்தில் இருந்தும் பங்கேற்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தமிழகத்தில் இருந்தும் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 March 2023 1:45 AM IST (Updated: 21 March 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நேற்று நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' அமைப்பு அறிவித்து இருந்தது. இதன்படி போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு வந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்தும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

ராம்லீலா மைதானத்தில் 'கிசான் மகா பஞ்சாயத்து' என்கிற பெயரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சமூக சேவகி மேதா பட்கர் உள்பட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பேசினார்கள்.

பின்னர் போராட்டக் குழுவில் இருந்து 15 பேர் கொண்ட குழு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தது. அப்போது விவசாயிகளுக்காக நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளையும், இனி நிறைவேற்ற இருக்கிற கோரிக்கைகள் பற்றியும் மந்திரி விளக்கியதாக தெரிகிறது.

போராட்டத்தில் பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "மோடி அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பிக்க பார்க்கிறது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மாநில அரசுகள் மீது சுமத்த முயற்சிக்கிறது. மரபணு மாற்று விதைகளை வேளாண்மையில் அனுமதித்து மண்ணையும், மக்களையும் அழிக்க நினைக்கிறது" என்றார்.

போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும், பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.


Next Story