கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு கேட்டு பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல்ரெயில் சேவை பாதிப்பு
பஞ்சாப்பில் மத்திய அரசின் பரத்மாலா திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து ஏராளமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அமிர்தசரஸ்,
பஞ்சாப்பில் மத்திய அரசின் பரத்மாலா திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து ஏராளமான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு நேற்று பஞ்சாப் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் அமிர்தசரஸ் அருகே ரெயில் மறியலில் ஈடுபட்டனர். கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற வேளாண் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் இந்த மறியலை நடத்தினர். அமிர்தசரசில் இருந்து சுமார் 20 கி.மீ. அருகே உள்ள தேவிதாஸ்புராவில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக அமிர்தசரஸ்-டெல்லி இடையிலான ரெயில்கள் பகல் 12.30 மணிக்கு மேல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்த போராட்டத்தில் பேசிய வேளாண் அமைப்பின் செய்தி தொடர்பாளர் குர்பசன் சிங் சப்பா, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.