விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமானது
சிவமொக்காவில் மழைக்கு விளை நிலங்கள் நீரில் மூழ்கி நாசமானது.
சிவமொக்கா:
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏராளமான விவசாய நிலங்கள் நாசமானது. மேலும் வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 வாரமாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. தற்போது கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் பொம்மனகட்டே, சோமினகொப்பா பகுதியில் பெய்த மழையில் ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது இந்த பகுதியில் நெல், மக்காச்சோளம் உள்பட பல்வேறு பயிர்கள் விளைவிப்பது வழக்கம். இந்த முறை மழை அதிகம் பெய்ததால் அந்த பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகளை விளைவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் மழை வந்து அனைத்து காய்கறிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த காய்கறிகளை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்ததுடன், உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.