கால்சென்டர் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் படுக்கை அறையில் தாய் பிணமாக கிடந்தார். அவரது மகளான கால்சென்டர் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார். மகளே தாயை தீர்த்து கட்டினாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:-
கால்சென்டர் ஊழியர்
பெங்களூரு பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேஷ்வராநகர், 1-வது மெயின் ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜரினாதாஜ் (வயது 55). இவரது மகள் ரிஜியா சுல்தானா (31). இவருக்கு திருமணமாகி விட்டது. கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக ரிஜியா வேலை பார்த்து வந்தார். கணவர் சரியாக வீட்டுக்கு வருவதில்லை, தன்னை கவனித்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் தாய் வீட்டுக்கு ரிஜியா வந்திருந்தார்.
இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக ரிஜியா நிறுவனத்திற்கு செல்லவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும், அவர் எடுத்து பேசவில்லை, அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் அவருடன் வேலை பார்க்கும் பெண் ரிஜியா வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வந்திருந்தார். அப்போது கதவு உட்புறமாக பூட்டி கிடந்ததுடன், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றமும் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பண்டே பாளையா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பெண் தற்கொலை
போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் கட்டிலில் ஜரினாதாஜ் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் ரிஜியா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் ரிஜியா தற்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள்.
ஆனால் ஜரினாதாஜ் எப்படி உயிர் இழந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. கணவரை பிரிந்து வந்து தாயுடன் ரிஜியா வாழ்ந்து வந்ததால், தாய், மகள் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மகள் கொலை செய்தாரா?
மேலும் குடும்ப பிரச்சினையில் தாயை கொலை செய்துவிட்டு, ரிஜியா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். என்றாலும், ஜரினாதாஜின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.