சக டாக்டர் காதல் தொல்லை கொடுத்ததால் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
சக டாக்டர் காதல் தொல்லை கொடுத்ததால் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பல் டாக்டர்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் பிரியன்ஷி திரிபாதி. இவர் பெங்களூரு சஞ்சய்நகரில் தங்கி எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்த சுமித் என்பவர் பிரியன்ஷியை காதலித்து வந்தார். ஆனால் பிரியன்ஷி அவரை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது.
மேலும் அவருக்கு தொடர்ந்து சுமித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சுமித்தை பிரியன்ஷி கண்டித்துள்ளார்.
தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த சுமித், பிரியன்ஷி பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக தெரிகிறது. அதாவது, பிரியன்ஷியின் நடத்தை சரியில்லை என்றும், அவர் சிகரெட் புகைப்பதாகவும், தினமும் மது அருந்துவதாகவும் கூறி வந்துள்ளார். இதனால் பிரியன்ஷி மீது அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு கெட்ட அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பிரியன்ஷி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சஞ்சய் நகரில் உள்ள வீட்டில் வைத்து பிரியன்ஷி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சஞ்சய்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட பிரியன்ஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சஞ்சய்நகர் போலீசார், டாக்டர் சுமித் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.