ஆந்திரா: ஆன்லைனில் பணத்தை இழந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஏரியில் குதித்து தற்கொலை..!
ஆந்திரா, குண்டூர் அருகே ஆன்லைனில் பணத்தை இழந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்கலகிரி அடுத்த நவலூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா சவுத்ரி. (வயது 22). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்வேதாவின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ரூ.1.30 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ 11 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஸ்வேதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார். இதை அடுத்து எதிர் முனையில் பேசிய அந்த மர்ம நபர் ஸ்வேதா வங்கி கணக்கிற்கு ரூ.50,000 அனுப்பினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்வேதாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் தற்போது 1.30 லட்சத்தை தனது வங்கி கணக்குக்கு செலுத்துமாறு வங்கி கணக்கு எண்ணை செல்போனிற்கு அனுப்பினார்.
இதையடுத்து ஸ்வேதா மர்ம நபர் அனுப்பிய ஐம்பதாயிரத்துடன் சேர்த்து ரூ.1.30 லட்சத்தை அனுப்பி வைத்தார். மர்ம நபரின் செல்போன் என்னை ஸ்வேதா தொடர்பு கொண்ட போது செல்போனில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்வேதா விரக்தி அடைந்து யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இந்த நிலையில் ஸ்வேதா வேலை செய்யும் சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து போன் செய்து வெள்ளிக்கிழமை வேலைக்கு நேரில் வருமாறு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் செல்வதற்காக ஸ்வேதா குடும்பத்தினர் காரில் செல்ல தயாராக இருந்தனர். அப்போது வெளியில் சென்று வருவதாக ஸ்வேதா தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து செல்ல கல்லு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக தனது தாய்க்கு போன் செய்தார். அவரது தாயார் ஸ்வேதா செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சுவேதாவின் தாயார் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பார்த்த போது சுயதாகின் செல்போன் மட்டும் ஏரிக்கரை மீது இருந்தது.
போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சில்லக்கல்லு ஏரியில் ஸ்வேதாவை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ஸ்வேதாவின் உடல் ஏரியில் மிதந்தது. போலீசார் ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ததில் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஸ்வேதாவிடம் பணத்தை ஏமாற்றியது யார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.