பெண் சித்ரவதை வழக்கு; வீடியோவை போலீசிடம் அளித்த பா.ஜ.க. மகளிரணி நிர்வாகியின் மகன்


பெண் சித்ரவதை வழக்கு; வீடியோவை போலீசிடம் அளித்த பா.ஜ.க. மகளிரணி நிர்வாகியின் மகன்
x

வீட்டு வேலைக்கு வந்த பெண் சித்ரவதை செய்யப்பட்ட வீடியோவை பா.ஜ.க. மகளிரணி நிர்வாகியின் மகனே போலீசுக்கு கிடைக்கும்படி செய்துள்ளார்.



ராஞ்சி,



ஜார்க்கண்டில் ராஞ்சி நகரை சேர்ந்த சீமா பத்ரா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவியாவார். பா.ஜ.க. மகளிரணியின் தேசிய செயல் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டில் பழங்குடியின பெண்ணான சுனிதா (வயது 29) என்பவர் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சீமா மீது சுனிதா சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகார் ஒன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதனடிப்படையில், ராஞ்சி நகரின் அர்கோரா போலீசார் பத்ராவை தேடி வந்தனர். போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்பி செல்ல முயன்ற சீமாவை போலீசார் இன்று காலையில் கைது செய்தனர்.

சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து உள்ளன. அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் நான் வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிவறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, உணவோ அல்லது தண்ணீரோ தராமல் அவர் பல நாட்களாக துன்புறுத்தப்பட்டு உள்ளார். இரும்பு தடிகளை கொண்டு பத்ரா அவரை அடித்து உள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. வேலை செய்யும்போது தவறு ஏற்பட்டு விட்டால், அவர் என்னை அடிப்பார் என்று சுனிதா கூறியுள்ளார்.

சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164ன் கீழ் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளரை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்துள்ளது.

இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக சீமா பத்ராவை போலீசார் கொண்டு செல்லும்போது, அவர் பத்திரிகையாளர்களை நோக்கி, இவை பொய்யான குற்றச்சாட்டுகள். அரசியல் உள்நோக்கம் கொண்டவை. நான் சிக்க வைக்கப்பட்டு உள்ளேன் என கூறினார்.

இந்த வழக்கில், சீமா பத்ராவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அவரை வருகிற செப்டம்பர் 11-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சீமாவின் மகனே வீடியோ வெளிவருவதற்கான காரணியாக இருந்துள்ளார். சீமாவின் துன்புறுத்தலை கண்டு சகிக்க முடியாத அவரது மகன் ஆயுஷ்மான், நண்பரை தொடர்பு கொண்டு அதுபற்றிய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார். உதவி செய்யும்படியும் கோரியுள்ளார்.

அவரது நண்பர் விவேக் ஆனந்த் பாஸ்கே அரசு அதிகாரியாக உள்ளார். அவர் போலீசிடம் இந்த வீடியோ விவரங்களை கொடுத்து உள்ளார். இதனை தொடர்ந்தே போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர்.

இந்த சூழலில், வீடியோ வெளியான விவரம் அறிந்த சீமா, அதற்கு தனது மகனே காரணம் என்றும் தெரிந்து, ஆத்திரத்தில் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி சீமாவிடம் கேட்டதற்கு மகனுக்கு உடல்நலம் சரியில்லை என கூறியுள்ளார். சீமாவின் மகனே, நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்று சுனிதா அழுது கொண்டே வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.


Next Story