போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து..!
போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.
காலை 8.30 மணியளவில் குர்வாய் கெதோரா ரெயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரெயில் சென்றபோது 14-வது பெட்டியின் அடிப்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கினர். தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரெயிலில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே துறை கூறுகையில், பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும், ஆய்வுக்கு பிறகு சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.