ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்; முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு
ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என அவர் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார்.
இதனால், அவர்கள் அந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்த கூடிய மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இதேபோன்று, 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன், நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் வரை தள்ளுபடி செய்யப்படும்.
அவர்களுக்கான மின் கட்டணத்தொகையை அரசே செலுத்தி விடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை தனது டுவிட்டரில் கெலாட் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தானில் பிரதமர் மோடி, இன்று நடந்த பேரணி ஒன்றில் காங்கிரசுக்கு எதிராக கடுமையான பேசிய நிலையில், அரசின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காருடன் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது.