113 நாட்களுக்கு பிறகு முதல்முறை: 500-ஐ தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு
நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
நம் நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 456 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 500-ஐ கடந்தது. 24 மணி நேரத்தில் 524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 113 நாட்களுக்கு பிறகு இந்த அளவுக்கு தினசரி பாதிப்பு பதிவானது இதுவே முதல் முறை.
இதுவரை இந்த தொற்று 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 492 பேரைப் பாதித்து இருக்கிறது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 96 ஆயிரத்து 170 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
நேற்று ஒரு நாளில் தொற்றில் இருந்து 311 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 93 பேர் இதுவரை குணம் அடைந்திருக்கிறார்கள்.
நேற்று கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் ஒன்றைப் பதிவு செய்தனர். மற்றபடி எங்கும் தொற்றால் உயிர்ப்பலி இல்லை என்பது ஆறுதல் தகவல். தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 781 ஆக உள்ளது. நேற்று கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 212 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 618 ஆகும்.