வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது


வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது
x

கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்று தகவல்களை ஆன்லைனில் படித்து அதன் மூலம் வீட்டில் கஞ்சா செடி வளர்த்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 2 இளைஞர்கள் சுற்றித்திரிந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 2 இளைஞர்களும் சிவமோகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர் தாங்கள் தங்கியுள்ள வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து இவர்களுக்கு விற்பனை செய்வதும் அவர்கள் அவற்றை வெளிநபர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிவமோகா புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த 3 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் ஆன்லைன் மூலம் கஞ்சா செடிக்கான விதைகளை வாங்கியுள்ளனர். வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டுவரும் வகையில் விளக்குகளை அமைத்து கஞ்சா செடி வளர்த்துள்ளனர். செயற்கை காற்றுக்காக 6க்கும் மேற்பட்ட மின்விசிறிகளை அமைத்துள்ளனர்.

கடந்த மூன்றரை மாதங்களாக இவர்கள் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதை சக மாணவர்கள் மூலம் வெளியே விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து 227 கிராம் உலரவைக்கப்பட்ட கஞ்சா, 1.5 கிலோ எடைகொண்ட கஞ்சா செடி, கஞ்சா விதைகள், 19 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story