ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு கள்ளக்காதலியை அழைத்து வந்த கணவன்: கையும்-களவுமாக பிடித்த மனைவி
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த நபரை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார்.
பெங்களூர்:
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா தசுதி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவருக்கும், அதே பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கும் இடையே பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரங்கநாத்தின் மனைவி வீட்டில் இல்லை. அப்போது ரங்கநாத், பள்ளி ஆசிரியையை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டிற்கு ரங்கநாத்தின் மனைவி சந்திரம்மா வந்தார்.
அவர் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது, தனது கணவருடன் வேறு ஒரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவர் மற்றும் ஆசிரியையை சரமாரியாக தாக்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.
இதையடுத்து கணவர் ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறி சந்திரம்மா தரப்பில் சிக்கநாயக்கனஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பெண் ஆசிரியையை பணியிட மாற்றம் செய்ய கோரி ரங்கநாத்தின் மனைவி கோரிக்கை வைத்து வருகிறார். கள்ளக்காதலியுடன் இருந்த கணவரை கையும், களவுமாக மனைவி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.