சாலை அகலப்படுத்தும் பணிக்காக 15 வீடுகள் இடிப்பு; அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம்
சிக்கமகளூரு அருகே, சாலையை அகலப்படுத்தும் பணிக்காக பொதுப் பணித்துறையினர் 15 வீடுகளை இடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு;
சாலை அகலப்படுத்தும் பணி
சிக்கமகளூரு (மாவட்டம்) டவுனில் வீட்டு வசதி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து இரேமகளூர் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக சாலையை அளக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் சிக்ககுருபரஹள்ளி கிராமம் அருகே சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளை இடிக்க அரசு முதலில் நிவாரணம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நாங்கள் தடை உத்தரவு வாங்கியிருக்கிறோம் என்று கூறினர்.
15 வீடுகள் இடிப்பு
ஆனால் அதை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு 15 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. முடிவில் அதிகாரிகள் வீடுகளை இடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.