15 ஆண்டுகளில் முதன்முறையாக... இந்தியாவுக்கு கிரீஸ் நாட்டு பிரதமர் பயணம்
புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்வார்.
புதுடெல்லி,
கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் வருகிற 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில் கிரேக்க பிரதமரின் இந்த பயணம் அமைகிறது. இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கிரீஸ் நாட்டு பிரதமர் ஒருவர் 15 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தக குழு ஒன்றும் அவருடன் வருகிறது.
ராஷ்டிரபதி பவனில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு விவாதங்களில் பங்கேற்பார்கள்.
புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்வார். பிரதமர் மோடி, விருந்தினர்களுக்கு மதிய விருந்தும் அளிக்க இருக்கிறார். கிரீஸ் பிரதமர் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு முன்பு, மும்பைக்கு செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.
கடைசியாக 2008-ம் ஆண்டில், கிரீசின் பிரதமராக இருந்த கொஸ்டாஸ் கரமன்லிஸ், அந்நாட்டு வெளியுறவு மந்திரி டோரா பகோயான்னிஸ் உடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதன்பின்பு 15 ஆண்டுகள் கழித்து கிரீஸ் பிரதமரின் இந்திய பயணம் அமைகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் கிரீஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் சார்ந்த நட்புறவானது அதிகரித்துள்ளது.