யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்
யோகா மையத்தில் வெளிநாட்டு பெண்ணை யோகா பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே மல்லேனஹள்ளி கிராமத்தில் யோகா மற்றும் தியான மையம் செயல்பட்டு வருகிறது. இந்த யோகா மையத்திற்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மையத்தில் பெங்களூருவை சேர்ந்த பிரதீப் என்பவர் யோகா பயிற்சியாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், சிக்கமகளூருவுக்கு வந்து 10 நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த பெண்ணை யோகா பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் யோகா பயிற்சியாளர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சிக்கமகளூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.