அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.60 லட்சம் மோசடி; பெண் கைது
சிவமொக்காவில், ஏராளமானோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி ரூ.60 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். அவரது மகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிவமொக்கா:
சிவமொக்காவில், ஏராளமானோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி ரூ.60 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். அவரது மகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
அரசு வேலை
சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரை தெரியும் என்றும், அவர்களிடம் கூறி தன்னால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் பலரிடம் கூறி வந்தார். அதை நம்பிய சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹொசூர் சித்தாப்புரா கிராமத்தைச் சேர்ந்த ஷபானா பானு, காதர் ஆகியோர் தலா ரூ.1.70 லட்சம் கொடுத்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ரேஷ்மா உறுதியளித்தபடி அரசு வேலை ஏதும் வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சிவமொக்கா நியூ டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷ்மாவை கைது செய்தனர்.
ரூ.60 லட்சம் மோசடி
விசாரணையில் ரேஷ்மா இதுபோல் ஏராளமானோரிடம் மோசடி செய்து ரூ.60 லட்சம் வரை சுருட்டி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த மோசடிக்கு ரேஷ்மாவின் மகள் தவுஷ்யா ஆஜம் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள தவுஷ்யா ஆஜமை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.